ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கீகார நெருக்கடி; உடனடி கட்சித் தேர்தல் வேண்டும் - தயாசிரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை தற்சமயம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருத முடியாது என இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்சியின் பல தரப்பினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திக் கருத்துக்களைக் கேட்டறிந்த ஆணைக்குழு, கட்சியை உட்பூசல் நிறைந்த கட்சி எனக் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் நடத்துவது உள்ளிட்ட தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்த பின்னரே மீண்டும் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும், உட்பூசல்களைத் தீர்க்காத கட்சிகளுக்கு வரவிருக்கும் தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஆணைக்குழுவின் தவிசாளர் முன்னிலையில் நேற்று (6) இடம்பெற்ற விசேட கலந்தாய்வுக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர, நீதிமன்ற வழக்குகளாலும் தொடர்ச்சியான உட்கட்சி மோதல்களாலும் கட்சியின் சகல செயற்பாடுகளும் முடங்கிப் போயுள்ளதாகவும், கட்சி செயலற்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் எதிர்வரும் தேர்தல்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
2023ஆம் ஆண்டு முதல் மாவட்ட நீதிமன்றம் மற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல்நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கட்சியின் இயங்குதன்மை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கலந்தாய்வில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் உடனடியாகக் கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தயாசிரி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.



